கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
உத்திரமேரூர்:-உத்திரமேரூரில், கழிவுநீர் கால்வாயில் உள்ள குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட வேடபாளையம் பகுதியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களின் மூலமாக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்குள்ள ராஜி தெருவில் சேதமடைந்திருந்த கழிவுநீர் கால்வாயை அகற்றிவிட்டு, சற்று அகலமான புதிய கழிவுநீர் கால்வாய் சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்டது. கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தும் போது, அங்குள்ள குடிநீர் குழாய் ஒன்றை தள்ளி அமைக்காமல் கால்வாயிலே விட்டுள்ளனர். இந்த குடிநீர் குழாய் கழிவுநீர் கால்வாயில் அமைந்துள்ளதால், தொற்றுநோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாயில் உள்ள குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறுகையில், ''கழிவுநீர் கால்வாயில் உள்ள, குடிநீர் குழாயை வேறொரு இடத்தில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.