எல்லையம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
வாலாஜாபாத் :வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற தேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒருகால பூஜை நடைபெறுகிறது. இந்த கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், பிப்., 2ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஊத்துக்காடு தேவி எல்லையம்மன் கோவில் வளாகத்தில்,அப்பகுதியை சேர்ந்தசிலர், பல நாட்களாக தள்ளுவண்டியில் கடைகள் அமைத்து, தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், கோவில் முன்பான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுமிகவும் சுருங்கி காணப்படுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வர வாய்ப்பு உள்ளதால், அச்சமயம் போதிய இடவசதி இல்லாமல் கடும் அவதிப்படும் நிலை உள்ளது.எனவே, கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, இக்கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.