| ADDED : மே 24, 2024 05:08 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு, தனி குடியிருப்பு கட்ட பொதுப்பணித் துறைக்கு, 42 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கார் பார்க்கிங் வசதியுடன், குடியிருப்புக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய, வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு, கலெக்டர் பங்களா பின்புறம், ஓராண்டுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது.திறக்கப்படாமலேயே நீண்ட காலமாக காத்திருந்த இந்த கட்டடத்தை, அமைச்சர் அன்பரசன் திறப்பதா, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்எல்ஏ எழிலரசன் திறப்பதா என்ற சர்ச்சை எழுந்தது.இறுதியாக, மூன்று மாதங்களுக்கு முன், கலெக்டர் வளாக மைதானத்தில் நடந்த பட்டா மேளாவில் அமைச்சர் அன்பரசன், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பை திறந்து வைத்தார்.அவர் திறந்து வைத்து, மூன்று மாதங்களுக்கு மேலான நிலையில், இதுவரை குடியிருப்பு பயன்பாட்டுக்கு வரவில்லை. புதர் மண்டி, சருகுகள் விழுந்து பாழடைந்து வருகிறது.எனவே, காஞ்சிபுரம் கோட்டாட்சியராக பணியாற்றி வரும் கலைவாணி, இந்த புதிய குடியிருப்பில் குடியேற தாமதம் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.