4 மாதங்களிலேயே சாலையோரம் சேதம்
உத்திரமேரூர்: காக்கநல்லுாரில் நான்கு மாதங்களிலேயே மண் அரிப்பினால் சாலை சேதமடைந்து உள்ளதால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். உத்திரமேரூரில் இருந்து, சதக்கம் வழியே காக்கநல்லுார் செல்லும்சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை சேதமடைந்து இருந்ததால், அவ்வழியே செல்ல வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. புதிய சாலை அமைக்க வாகன ஓட்டிகள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன், உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலை அருகே ஏரி நீர்வரத்து கால்வாய் செல்லும் பகுதிகளில், மண் கொட்டி அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையினால், ஏரி நீர்வரத்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. இதன் காரணமாக காக்கநல்லுார் பகுதியில் கால்வாயை ஒட்டி செல்லும் இடத்தில், சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சரிந்து விழுந்துள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சரிந்துள்ள சாலையோரத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காக்கநல்லுார் சாலையில் மண் அரிப்பினால், சேதமடைந்து சரிந்துள்ள சாலையை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.