ஊசி போடுறதுக்கு ரூ.2 லட்சம் வேணும்! குழந்தையை காப்பாற்ற போராடும் தந்தை
காஞ்சிபுரம்: 'அரிய வகை மரபணு குறைபாடால் பாதிக்கப்பட்ட தன் குழந்தைக்கு, 2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும். அதற்கு, தமிழக அரசு உதவ வேண்டும்' என, குழந்தையுடன் வந்த தந்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார். காஞ்சிபுரம் தாயார்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர், அரிய மரபணு குறைபாடால் பாதிக்கப்பட்ட தன் குழந்தையுடன் வந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், கலெக்டர் கலைச்செல்வியிடம் அளித்த மனு: என் குழந்தைக்கு 1 வயது வரை எந்த பிரச்னையும் இல்லை. அதன்பின் உடல் வளர்ச்சியில் மாற்றங்கள் தென்பட்டன. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து, இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றோம். அரிய வகை மரபணு குறைபாடு என, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், கை, கால்கள் மடக்க முடியவில்லை. கண்கள், சிறுநீரகம், கல்லீரல் என, உடல் உறுப்புகள் இயல்பை காட்டிலும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. இதற்கு தீர்வு காண, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊசியை, 30 வாரங்கள் தொடர்ந்து செலுத்தினர். மேலும், 30 வாரங்கள் ஊசி செலுத்த வேண்டும்; அதற்கான செலவை, நீங்கள்தான் ஏற்க வேண்டும் என, கூறிவிட்டனர். கூலி வேலை செய்யும் என்னால் அவ்வளவு பெரிய தொகையை செலவிட முடியாது. தற்போது 7 வயதாகும் என் குழந்தை, மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகிறாள். தொடர்ந்து ஊசி செலுத்தினால்தான், குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும். தமிழக அரசு எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசும் உதவிக்கரம் நீட்டி, குழந்தையை காப்பாற்றும் என, நம்புவோம்.