கறியாகூடல் தடுப்பணையில் மணல் தேக்கம் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல்
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி - சேந்தமங்கமலம் இடையே, கொசஸ்தலை ஆறு கடந்து செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே, நபார்டு வங்கி நிதியுதவியுடன், 7.60 கோடி ரூபாய் செலவில், 1 மீட்டர் உயரமும், 155 மீட்டர் நீளத்துடன் கூடிய தடுப்பணை கட்டி உள்ளனர்.இந்த தடுப்பணையின் வாயிலாக, கீழ்வெங்கடாபுரம், ஆட்டுப்பாக்கம், நெமிலி, கறியாகூடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் 300 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது.இந்த தடுப்பணை உயரத்திற்கு மணல் தேங்கி அதன் மீது புற்கள் வளர்ந்துள்ளன. வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழை பெய்யும் போது, மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டி இருக்கும் தடுப்பணையில் தேங்கி உள்ள மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.