முறையாக இயக்கப்படாத அரசு பஸ் சாத்தணஞ்சேரி கிராமத்தினர் அவதி
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் இருந்து, மெய்யூர் வழியாக, தடம் எண்: 'டி -9பி' என்ற அரசு பேருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, கரும்பாக்கம், மிளகர்மேனி, திருவானைக்கோவில், விச்சூர், சிதண்டிமண்டபம் உள்ளிட்ட கிராமத்தினர், இப்பேருந்தை பயன்படுத்தி செங்கல்பட்டுக்கு சென்று வருகின்றனர். தினமும் மூன்று முறை இயக்க வேண்டிய இப்பேருந்து, ஒரு மாதமாக சரிவர இயக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சில நாட்கள் காலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் இயக்கப்படுவதில்லை. மேலும், சில நாட்கள் நாள் முழுதும் இயக்கப்படுவதில்லை என, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், சாத்தணஞ்சேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போக்குவரத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதிக்கான அரசு பேருந்தை முறையாக இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.