கலாமின் 10வது நினைவு தினம் காஞ்சியில் விதைப்பந்து தயாரிப்பு
காஞ்சிபுரம்:முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பல்வேறு தன்னார்வ அமைப்பு சார்பில், காஞ்சிபுரத்தில் மரக்கன்று நடும் விழா மற்றும் விதைப்பந்து தயாரிக்கும் பணி நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிறகுகள் அமைப்பு சார்பில், பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா மற்றும் ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்று பராமரிப்பு பணி நேற்று நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, காஞ்சி அன்னசத்திரம், விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், காஞ்சி புரம் - செங்கல்பட்டு சாலை, திம்மையன்பேட்டை கிராம சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது. இதில், மகிழம், நெட்டலிங்கம், புன்னை, பூவரசு, பாதாம், மலைவேம்பு உள்ளிட்ட 15 மரக்கன்றுகள், கம்பி வேலியுடன் நடவு செய்யப்பட்டது. டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட 17 அலுவலகங்களிலும், கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரும்புதுார் சாலை, செங்கல்பட்டு சாலையோரம் நிழல்தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், தென்மேற்கு பருவமழையின்போது பிரதான சாலையோரம் துாவுவதற்காக ஸ்ரீபெரும்புதுார் அலுவலகத்தில் விதைப்பந்து தயார் செய்யப்பட்டது. இதில், டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு, நுாக் தன்னார்வ அமைப்புடன் இணைந்து, வேம்பு, நாவல், பூவரசு, புங்கன், ஆல், அரசு உள்ளிட்ட விதைகள் அடங்கிய 750 விதைப்பந்து தயாரித்தனர்.