உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உவர்ப்பாக மாறிய பாலாற்று குடிநீர் சீயமங்கலம் கிராமவாசிகள் தவிப்பு

உவர்ப்பாக மாறிய பாலாற்று குடிநீர் சீயமங்கலம் கிராமவாசிகள் தவிப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பாலாற்றங்கரையையொட்டி திம்மராஜம்பேட்டை, சீயமங்கலம், தாங்கி, வில்லிவலம், ஒட்டிவாக்கம், வெண்குடி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதி பாலாற்று படுகைகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்தி இல்லை

அக்கிணறுகள் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீரை நிலத்தின் கீழ் புதைத்த பைப்பு மூலம், கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதி பாலாற்றில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் சுவை மாறி துவர்ப்பாக உள்ளதாகவும், அதிகமாக தண்ணீர் அருந்தியும் தாகம் தீர்ந்த திருப்தி இல்லையென அப்பகுதி வாசிகள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து, சீயமங்கலம் கிராமவாசிகள் கூறியதாவது:சீயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக இப்பகுதி பாலாற்று குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து, அய்யம்பேட்டை, முத்தியால்பேட்டை, ஏகனாம்பேட்டை வழியாக வேகவதி ஆற்றில் வரும் தண்ணீர், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் பாலாற்றில் கலக்கிறது.

ரசாயன கழிவு

அப்போது, காஞ்சிபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர், தோல் மற்றும் ரசாயன கழிவுகள், உணவக கழிவுகளும், வீட்டு கழிவுநீரும் வேகவதி ஆற்று வழியாக பாலாற்றில் கலக்கிறது. இவ்வாறு மாசடைந்த தண்ணீர் பாலாற்று நிலத்தடி நீரோடு கலப்பதால் குடிநீர் சுவை மாறி விட்டது. மேலும், மழைக்காலங்களில் இப்பகுதி ஆற்றில் தேக்கமாகும் தண்ணீர் துர்நாற்றம் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பாலாற்று நீர் வளம் மற்றும் மண் வளம் நஞ்சாவதை தவிர்க்கும் பொருட்டு, பாலாற்றில் கழிவுநீர் தடுப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி