பாதாள சாக்கடையில் அடைப்பு தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஒலிமுகமதுபேட்டை வரதப்பன் பின் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி, முதலாவது வார்டு, ஒலிமுகமதுபேட்டை, வரதப்பன் பின் தெருவில், ரேஷன் கடை மற்றும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போர் ரேஷன் கடைக்கு செல்ல, வரதப்பன் பின் தெரு வழியாக சென்று வருகின்றனர். இந்த தெருவில் ஒரு மாதமாக, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், பாதாள சாக்கடை மூடி வழியாக, சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், ஒலிமுகமதுபேட்டையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.