தனியார் நிறுவனம் சார்பில் சிக்னல், மின்விளக்கு அமைப்பு
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை 33 கி.மீ., துாரம் உடையது. ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.இந்த சாலையில், முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில், உயர்கோபுர மின்விளக்கு மற்றும் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், காரணித்தாங்கல் செக்போஸ்ட் சந்திப்பில், இசட்.எப்., குழுமத்தின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, எல்.இ.டி., திரையுடன் சிக்னல், உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டன.இதை, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் நேற்று திறந்து வைத்தார். இதில், ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., கீர்த்திவாசன், ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து குறையும் என, போலீசார் தெரிவித்தனர்.