ஒரு பக்கம் இணைப்பு சாலை அமைக்காததால் சிறுபாலம் அமைத்தும் பயன்படுத்த முடியலை
உத்திரமேரூர்:ஒழையூரில் சிறுபாலத்தின் ஒருபக்கம் இணைப்பு சாலை அமைக்காததால், பயன்படுத்த முடியவில்லை என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், ஒழையூர் கிராமத்தில் ஊராட்சி சேவை மைய வளாகம் உள்ளது. இந்த வளாகத்திற்கும் கிராமத்தின் பிரதான சாலைக்கும் இடையே நீர்வரத்து கால்வாய் உள்ளது.இதனால், பிரதான சாலையில் இருந்து கால்வாயில் இறங்கி, ஊராட்சி சேவை மையத்திற்கு பொதுமக்கள் சென்று வந்தனர். இந்த கால்வாய் வழியாக மழை நேரங்களில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.எனவே, நீர்வரத்து கால்வாய் மீது சிறுபாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, கடந்தாண்டு பல லட்சம் ரூபாய் செலவில் சிறுபாலம் அமைக்கப்பட்டது.ஆனால், அமைக்கப்பட்ட சிறுபாலத்தோடு ஊராட்சி சேவை மைய வளாகத்திற்கு இணையாக சாலை அமைக்காமல் விட்டுள்ளனர்.இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஆறு அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. பாலத்தின் ஒரு பக்கம் சாலை அமைக்காமல் விட்டதால், சிறுபாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, ஒழையூரில் சிறுபாலத்தின் இருபுறமும் சாலை அமைத்து, அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.