பொறியியல் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரியில், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து, 6 நாட்கள் நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சியை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், நான்கு பொறியியல் கல்லுாரிகளைச் சேர்ந்த 300 மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வாயிலாக, தலைமை பண்பு, தகவல் தொடர்பு திறன், தொழில் முனைவோருக்கான திறன், நிதி மேலாண்மை உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்வது பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கலெக்டர் கலைச்செல்வி பேசியதாவது:மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு செயல்படுத்தும், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்களுடைய வேலைவாய்ப்பிற்கிணங்க திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.வேலைவாய்ப்பை தேடுவது மட்டுமல்லாமல் சுயதொழில் தொடங்க முயற்சி எடுத்து மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.மேலும் அரசு உருவாக்கியுள்ள அரசு தொழில் சார்ந்த வேலை வாய்ப்புகளையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.