கைவிட்ட கல் குவாரி பள்ளங்களில் வீணாக தேங்கும் தண்ணீர் பசுமையை உருவாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி முடிவடைந்து கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளங்களில் வீணாக தேங்கும் தண்ணீரை, மரக்கன்று வளர்த்தல் உள்ளிட்ட பாசன பயன்பாட்டு திட்டம் மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத் தின் பல பகுதிகளில், அரசு மற்றும் தனியார் கல் குவாரிகள், 15 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்குகிறது. தற்போது மாவட்டம் முழுக்க 50க்கும் மேற்பட்ட இடங்களில் கல் குவாரிகள் செயல்படுகிறது. உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில் காலாவதியான கல் குவாரிகள் அதிகம் உள்ளன. பயன்பாட்டுகாலம் முடிந்து கைவிடப்பட்ட அக்குவாரி பள்ளங்களில் ஆண்டு முழுக்க தண்ணீர் வற்றாமல் உள்ளது. ஒரு சில குவாரி பள்ளங்களில் நீருற்று அதிகம் சுரக்கும் நிலை உள்ளது. இவ்வாறு தேக்கமாகும் தண்ணீர் பயன்பாடு இல்லாமல் வீணாவது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதங்கப்படுகின்றனர். இதுகுறித்து, வாலாஜாபாத் ஒன்றியம், விதைகள் தன்னார்வ அமைப்பாளர் சரண் கூறியதாவது: கைவிடப்பட்ட கல் குவாரிகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு பல வகையில் பசுமை உருவாக்கலாம். உதாரணத்திற்கு வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக் கூடலில் குறுங்காடுகள் ஏற்படுத்தி உள்ளோம். இந்த குறுங்காட்டில் பல ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்து, கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளத்தில் தேங்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறு வாய்ப்புள்ள கிராம பகுதிகளில் அங்குள்ள ஊராட்சி நிர்வாகிகளின் ஆர்வத்தால், கைவிடப்பட்ட கல் குவாரி அருகாமையிலான அரசு நிலங்களில் பசுமை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அதற்கு விதைகள் தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் உதவ தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.