உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி வரதர் கோவிலில் பிரபந்தம் பாடிய தென்கலை பிரிவினர்

 காஞ்சி வரதர் கோவிலில் பிரபந்தம் பாடிய தென்கலை பிரிவினர்

காஞ்சிபுரம்: சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தென்கலை பிரிவினர் நேற்று பிரபந்தம் பாடும் நிகழ்ச்சி எந்தவித பிரச்னையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது என, கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி தெரிவித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில், தென்கலை பிரிவினர் மட்டுமே பிரபந்தம் பாட அனுமதிக்கும், கோவிலின் உதவி ஆணையர் உத்தரவை எதிர்த்து, வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில், சென்னை ஐகோர்ட், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பிரபந்தம் பாட, வடகலைப் பிரிவினருக்கு அனுமதி வழங்கி, 2022ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாட அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடினர். இதுகுறித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 4:00 மணிக்கு கைசிக துவாதசி புராண படனம் நடந்தது. ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நேற்று காலை தென்கலை பிரிவினர் பெருமாளுக்கு பிரபந்தம் பாடினர். தென்கலை பிரிவினர் முதல் இரண்டு வரிசையில் அமர்ந்து பிரபந்தம் பாடினர். மூன்றாவது வரிசையில் அமர்ந்து வடகலை பிரிவினரும் அமர்ந்து தென்கலை பிரிவினருடன் சேர்ந்து பிரபந்தம் பாடினர். எந்தவித பிரச்னையும் இன்றி பிரபந்தம் பாடும் நிகழ்ச்சி மிகவும் அமைதியாக நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ