பழவேரியில் ஒரே கல்லில் செய்த 160 டன் அனுமன் சிலைக்கு சிறப்பு பூஜை
பழவேரி: பழவேரி, சிற்பக்கலைக் கூடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 160 டன், 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அனுமன் சிலை இறுதி வடிவம் பெற்றதையடுத்து, நேற்று பல்வேறு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை என்ற கிராமத்தில் பெரிய பாறையை குடைந்து ஒரே கல்லில் பிரமாண்ட அனுமன் சிலை செய்யும் பணியை கடந்த ஆண்டில் அதே பகுதி யில் மேற்கொண்டனர். சிலை செதுக்கும் பணி அங்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாதி அளவிலான வடிவமைப்பிற்கு பின், 200 டன் எடை கொண்ட அச்சிலையை முழுமையாக வடிவமைப்பு செய்ய மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்தனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேரி கிராமத்தில் உள்ள சிற்பக் கலைக் கூடத்திற்கு, 158 டயர் பொருத்திய ராட்சத கார்கோ வாகனம் வாயி லாக, வந்தவாசி, மேல்மரு வத்துார், செங்கல்பட்டு சாலை வழியாக 80 கி.மீ., துாரம் பயணித்து, கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்டது. பழவேரி, எஸ்.கே.என்., சிற்பக்கலைக்கூடம் நிறுவனத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர், நான்கு மாதங்களாக அனுமன் சிலை வடிவமைப்பு பணியில் ஈடுபட்டனர். 36 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட இந்த சிலை, 160 டன் எடையில் இறுதி வடிவம் பெற்றுள்ளது . இதையடுத்து, அனுமன் சிலைக்கு நேற்று, காலை 11:00 மணி முதல் யாகம் வளர்த்து பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்து கலச நீர் தெளித்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதணை நடைபெற்றது.