மேலும் செய்திகள்
உத்திரமேரூர் ஏரியில் தண்ணீர் திறப்பு
09-Dec-2024
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஏரிக்கரை ஓரத்தில், அரசாணிமங்கலம் -- வேடபாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள விக்ரமநல்லூர் பகுதியில் இருந்த தரைப்பாலம் சேதமடைந்து, ஓராண்டிற்கு முன் அகற்றப்பட்டு, புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் கட்டுமான பணி நடப்பதால், அவ்வழியே வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. ஒரு வாரத்திற்கு முன் பெய்த கனமழையால், உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.தொடர்ந்து, விவசாயம் செய்வதற்கு ஏரியின் நரிமடை, நான்கு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இதிலிருந்து உபரிநீர் வேகமாக வெளியேறி, மூன்று நாட்களுக்கு முன் பாலத்தின் அருகே உள்ள மாற்றுப்பாதை சேதமடைந்து, மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.இதனால், அவ்வழியே போக்குவரத்து தடைப்பட்டு, அரசாணிமங்கலம், ஒட்டந்தாங்கள், மேனலூர் பகுதிவாசிகள், 10 கி.மீ., சுற்றிக்கொண்டு உத்திரமேரூர் வந்து சென்றனர்.இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஏரியின் நரிமடை மூடப்பட்டு, துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
09-Dec-2024