டாஸ்மாக் முன் வெட்டுக்குத்து: ரத்த வெள்ளத்தில் இருவர் மீட்பு
தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில், 'டாஸ்மாக்' முன் மது அருந்திக் கொண்டிருந்த இருவரை, வெவ்வேறு கும்பல் சரமாரியாக வெட்டியது. இவ்விரு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்யூர் அடுத்த சூணாம்பேடையைச் சேர்ந்தவர் தினேஷ், 27. ஒரு வாரத்திற்கு முன், அந்த ஊரில் நடந்த ஒரு இறுதி ஊர்வலத்தில், தினேஷுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நான்கு பேர் சேர்ந்து, தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, கடந்த வாரம் தாம்பரத்திற்கு வந்த தினேஷ், இங்கு தங்கி, ஓட்டுநர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையம் அருகேயுள்ள 'டாஸ்மாக்' கடை எதிரே, சாலையில் நின்று தினேஷ் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, தினேஷை, தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி தப்பியது. இதில், படுகாய மடைந்த தினேஷுக்கு, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றொரு சம்பவம் இதேபோ ல், அதே இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த செம்பியத்தைச் சேர்ந்த அப்துல் ரகீம், 35 என்ற நபரையும், மற்றொரு கும்பல் வெட்டி தப்பியது. பலத்த காயமடைந்த அப்துல் ரகீம், தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விரு சம்பவங்கள் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.