கரும்பு தொழிலாளர்கள் கூலி உயர்த்த கோரிக்கை
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம் வாயிலாக விவசாயிகள் ஆண்டுதோறும் கரும்பு பயிரிடுகின்றனர்.கடந்த ஆண்டு சாகுபடி செய்த கரும்புகளை, கடந்த சில நாட்களாக அறுவடை செய்து வருகின்றனர்.தோட்டத்தில் கரும்புகளை வெட்டும் ஆண் தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் கூலியாக 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை நில உரிமையாளர்கள் வழங்குகின்றனர்.ஆனால், கரும்புக் கத்தை துாக்கும் பெண் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக 300 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.இதுகுறித்து, அரும்புலியூரில் கரும்புக் கத்தை துாக்கும் பெண் தொழிலாளர்கள் கூறியதாவது:தோட்டத்தில் அறுவடை செய்யும் கரும்புகளை, ஆலைக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்ற வசதியாக குறிப்பிட்ட ஒரு இடம் தேர்வு செய்யப்படும்.அந்த இடத்திற்கு கரும்புகளை விவசாய நிலங்கள் வழியாக தலைமேல் சுமந்து வந்து சேர்க்கும் பணியில், பெண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இவ்வாறு, நாள் முழுக்க கரும்பு கத்தைகளை தலைமேல் சுமக்கும் எங்களுக்கு, 300 ரூபாய் மட்டுமே ஒரு நாள் கூலியாக கிடைக்கிறது.கரும்பு அறுவடை பணியில் ஆண்டுக்காண்டு, ஆண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படுவதை போல, கரும்புக் கத்தைகள் சுமை துாக்கும் பெண் தொழிலாளர்களுக்கும், கூலி உயர்த்தி வழங்க முன் வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.