தொழிற்சாலை குப்பையை கொட்டிய டெம்போ, பொக்லைன் பறிமுதல்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வடமங்கலம் கிராமத்தில், தொழிற்சாலை குப்பையை கொட்ட வந்த இரண்டு டெம்போ மற்றும் பொக்லைன் இயந்திரங்களை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, தொழிற்சாலை கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து, ஸ்ரீபெரும்புதுார் அருகே, வடமங்கலத்தில் உள்ள காலி இடங்களில் கொட்டி மர்ம நபர்கள் தீயிட்டு எரித்து வந்தனர். இதனால், சுவாச கோளாறு, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு, வடமங்கலம் பகுதி மக்கள் உள்ளாகி வந்தனர். இது குறித்து, அப்பகுதி மக்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த நிலையில், நேற்று காலை அதே பகுதிகளில் தொழிற்சாலை குப்பையை கொட்ட வந்த இரண்டு டெம்போ மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.