காஞ்சியில் ஜவுளி துறைக்கு அலுவலகம் இல்லை! அரசு திட்டங்கள் பற்றி அறிய முடியாமல் அவதி
காஞ்சிபுரம் : கைத்தறி பட்டு சேலைக்கு புகழ் பெற்றது காஞ்சிபுரம் நகரம். அதேசமயம், ஆடைகள் உற்பத்தி, விற்பனைக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. கைத்தறி வளர்ச்சி திட்டங்களுக்கு, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் துணை இயக்குனர் அலுவலகம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கோரிக்கை
ஆனால், ஜவுளித் துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகம் இல்லை.கடந்த 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கைத்தறி மற்றும் துணிநுால் என்ற பெயருடன் ஒரே துறையாக இருந்த இத்துறையை, இரண்டாக பிரித்து, கைத்தறி துறை தனியாகவும், துணிநுால் துறை தனியாகவும் செயல்பட்டு வருகிறது.தனித்தனி இயக்குனர்கள் செயல்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் ஜவுளித் துறைக்கு அரசு அலுவலகம் துவங்க வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.ஜவுளி தொழில் துவங்குவது, மேம்படுத்துவது, ஜவுளித் துறையில் உள்ள அரசு திட்டங்கள், திறன் பயிற்சிகள், அரசு மானியம் என பல்வேறு சந்தேகங்களை கேட்பதற்கு, காஞ்சிபுரத்தில் அலுவலகம் இல்லை.ஜவுளி ஏற்றுமதி மையம் காஞ்சிபுரத்தில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கையும் மெத்தனமாக உள்ளது. ஜவுளி ஏற்றுமதி மையம் அமைக்க, காஞ்சிபுரம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ள நிலையில், ஜவுளித் துறைக்கு அரசு அலுவலகம் இல்லாமல் உள்ளது. நடவடிக்கை
சென்னை அல்லது சேலம் ஆகிய பகுதிகளில் இயங்கும் ஜவுளித் துறை அலுவலகங்களை நாட வேண்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜவுளித் துறை சார்பில் அரசு அலுவலகம் துவக்க, அமைச்சர் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.