ஆற்று திருவிழாவிற்காக தயாராகும் ரிஷப வாகனம்
உத்திரமேரூர்: ஆலத்துார் சோமேஸ்வரர் கோவிலின் ஆற்று திருவிழாவிற்காக ரிஷப வாகனம் செய்யும் பணி, விசூர் கணபதி கிருஷ்ணா கலைக்கூடத்தில் நடந்து வருகிறது . உத்திரமேரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூசத்தை முன்னிட்டு பெருநகரில் நடக்கும் ஆற்றுத் திருவிழாவில், சோமேஸ்வரர் பங்கேற்பது வழக்கம். அப்போது, சுவாமி ஊர்வலம் செல்ல ரிஷப வாகனம் இல்லாமல் இருந்ததால், வாடகைக்கு வாகனத்தை எடுத்து பெருநகர் ஆற்றுத் திருவிழாவிற்கு சென்று வருகின்றனர். எனவே, சொந்தமாக ரிஷப வாகனம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதையடுத்து, விசூர் கணபதி கிருஷ்ணா கலைக்கூடத்தில், 7 அடி உயரமும், 6 அடி நீளமும் கொண்ட, மரத்திலான ரிஷப வாகனம் செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது, ரிஷப வாகனம் செய்யப்பட்டு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ரிஷப வாகனம் ஒப்படைக்கப்படும் என, கலைக்கூட ஸ்தபதி சந்திரசேகரன் தெரிவித்தார்.