மேலும் செய்திகள்
புகார் பெட்டி
01-Sep-2025
வாலாஜாபாத், வாலாஜாபாத், சாய்கார்டன் பூங்காவில் 'குடி' மகன்களின் பயன்பாட்டு இடமாக மாறுவதை தவிர்த்து அதை பாதுகாத்து பராமரிக்க அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி சேர்க்காடு சாலையில், சாய்கார்டன் சிறுவர் பூங்கா உள்ளது. இப்பூங்காவிற்கு தினமும் சிறுவர்கள் முதல், பெரியோர் வரை வந்து உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இப்பூங்காவில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாய்கார்டன் பூங்கா பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. மேலும், வாலாஜாபாத் சுற்றி உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் இக்குடியிருப்பில் வாடகை வீடுகளில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சாய்கார்டன் பூங்காவில் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் குடி மகன்கள் மது அருந்திவிட்டு அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். குடி மகன்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். மது அருந்துவதற்காகவே துணியால் நிழல் தரும் வகையிலான கூடாரம் அமைத்து வைத்துள்ளனர். அதில், வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் தின்பண்டம் பயன்படுத்திய காகிதங்கள் போன்றவை அங்கேயே குவிந்து உள்ளது பூங்கா குப்பை கிடங்காக மாறி வருகிறது. எனவே, இப்பகுதியில் மது அருந்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு பூங்காவை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Sep-2025