காஞ்சிபுரத்தில் வரும் 17 முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா
காஞ்சிபுரம்: தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா, வரும் 17ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட, 1956 டிச.27ம் நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், டிச.17 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அரசு ஊழியர்களுக்கு கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுத பயிற்சி வழங்கப்பட உள்ளன. மேலும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி, வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்துதல், ஆட்மொழி திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி போன்றவை நடக்க உள்ளது. வரும் 26ல் ஆட்சிமொழி விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. அரசு ஊழியர்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்வுகளில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.