காஞ்சியில் வேலை கேட்டு பதிவு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைவு ஆண்டுக்கு 5,000 பேர் சராசரியாக பதிவு
காஞ்சிபுரம்:தமிழக அரசு பணிகளில் சேர போட்டித் தேர்வு மூலமாக மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளதால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 5,000 பேர் மட்டுமே பதிவு செய்வது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு பணிகளுக்கு, முந்தைய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அரசு பணிக்கு ஆள் எடுக்கும் நடைமுறை இருந்தது. இதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டய மற்றும் பட்ட படிப்பு முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக, கல்வி, தகுதி விபரங்களை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். குளறுபடி பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணிக்கு ஆள் எடுப்பதில் நடந்த குளறுபடிகள் காரணமாக, போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பணிக்கு ஆள் எடுக்கும் நடைமுறை, 10 ஆண்டுகள் முன்பு தமிழகத்தில் துவங்கின. அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கொண்டு வரப்பட்ட போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு பணிகளில் சேர முடியும் என்ற நிலை உருவானதால், 10 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்வோர் எண்ணிக்கை படிப்படியாக குறைய துவங்கியது. மேலும், தி.மு.க., அரசு 2021ல், ஆட்சி அமைத்த பின், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் வேலை வழங்குவதை காட்டிலும், பயிற்சி வழங்கும் பணிகளில் கவனம் செலுத்த துவங்கியது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீதான கவனமும், எதிர்பார்ப்பும், இளைஞர்கள் மத்தியில் குறைந்தது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என, 30,000க்கும் மேற்பட்டோர், ஒவ்வொரு ஆண்டும் முடித்தாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெறும் 5,000 பேர் மட்டுமே பதிவு செய்வது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில், ஆகஸ்ட் வரையிலான கணக்கெடுப்பில், 2,564 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பயிற்சி அரசு பணிக்கு போட்டி தேர்வுகள் அவசியம் என்பதால், அதற்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் ஈடுபடுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், போலீஸ் துறை தேர்வு, ரயில்வே துறைக்கான தேர்வு என மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குரூப் 2, குரூப் 4, ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல வகையிலான தேர்வுக்கு பயின்றவர்கள் 120 பேர் தேர்ச்சி பெற்று வேலை பெற்றதாக, வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவிக்கிறது. இதுகுறித்து வேலைவாய்ப்பு துறை அதிகாரி கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இப்போதும் கீழ்நிலை அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறோம். ஆனால், உதவியாளர், தட்டச்சர் மற்றும் பிற உயர் பணிகளுக்கு போட்டித் தேர்வு என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. எனவே, நாங்கள் இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். வேலைவாய்ப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில், குரூப் 2, குரூப் 4, ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல வகையிலான தேர்வுக்கு பயின்றவர்கள் 120 பேர் தேர்ச்சி பெற்று வேலை பெற்றுள்ளனர். அரசு பணிகளுக்கு மட்டுமல்லாமல், தனியார் துறையிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். நான்கு ஆண்டுகளில் மட்டும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 5,286 பேருக்கும், சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 2,802 பேர் என, 8,088 பேருக்கு, தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்