சாலையில் சிதறும் இரும்பு துண்டுகள் வாகனங்களின் டயர் பஞ்சராவதால் அவதி
இருங்காட்டுக்கோட்டை,:ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து பகுதிகளில் சிப்காட் தொழிற் பூங்கா உள்ளது. இங்கு கார், லாரி, பஸ், பைக், மொபைல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 1,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இந்த தொழிற்சாலைகளில் வீணாகும் சிறு சிறு இரும்பு துண்டு கழிவுகளை எடுத்து செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி செல்லப்படுகின்றன.இதனால், இந்த இரும்பு துண்டுகள், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சாலை என, பல இடங்களில் சிதறி கிடக்கிறது.இதன் மீது வாகனங்கள் செல்லும் போது டயர்களில் குத்தி பஞ்சர் ஆகிறது. சில நேரங்களில் டயர்கள் கிழிந்து சேதமாகிறது.சாலையில் சிதறி கிடக்கும் இரும்பு துண்டுகளை அகற்ற வேண்டும். அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.