உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டட அனுமதி பெற தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் அவலம்

கட்டட அனுமதி பெற தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் அவலம்

காஞ்சிபுரம்: கட்டட அனுமதி பெறுவதற்கான சுய சான்று அனுமதி பெறும் நடைமுறை பலருக்கும் தெரியாததால், இப்போதும் புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுகின்றனர். இதனால், விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் கட்டட அனுமதி பெறுவதில் பல சிக்கல் நீடித்தது. அலைக்கழிப்பு, பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என பல பிரச்னைகளுக்கு வீடு கட்டுவோர் ஆளாகினர். பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த நடைமுறையை, தமிழக அரசு மாற்றி, 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி பரப்பளவு வரையிலான வீடுகள் கட்ட, சுய சான்று முறை அமல்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த புதிய நடைமுறையில், எளிதாக கட்டட அனுமதி பெற முடியும். நில உரிமை, கட்டட வரைபடம் போன்ற குறிப்பிட்ட சில ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவேற்றினால் போதும்; கட்டணங்கள் விபரம் தெரிவிக்கப்படும். இந்த கட்டணங்களை செலுத்தியவுடன், வரைபட அனுமதிக்கான கடிதம், ஆன்லைன் வழியாக வந்து விடும். எளிதாக மாற்றப்பட்ட இந்த நடைமுறை பலருக்கும் தெரியாமல் உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், கட்டட அனுமதி பெறும் புதிய நடைமுறை குறித்து, விழிப்புணர்வு பேனர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. புதிய கட்டட அனுமதி வழிமுறைகள் தெரியாத பலரும், புரோக்கர்களிடம் கட்டட அனுமதி பெற பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாறுகின்றனர். புதிதாக வீடு கட்டுவோர் சுய சான்று அடிப்படையில் வீடு கட்டும் அனுமதியை எளிதாக பெறுவதற்கான, விளக்கமான பதாகையை மாநகராட்சி அலுவலக வளாகத்திலும், நகரின் சில முக்கிய இடத்திலும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை