மேலும் செய்திகள்
காந்தி ரோடு வியாபாரிகள் மனிதசங்கிலி போராட்டம்
17-Dec-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின் மிக முக்கிய சாலையாக காந்திரோடு உள்ளது. இங்கு, ஏராளமான பட்டுச் சேலை கடைகள் மட்டுமல்லாமல், ஜவுளிக்கடைகள், ஹோட்டல், திருமண மண்டபம், வங்கிகள் போன்றவை இயங்கி வருகின்றன.நகரின் வியாபார மையமாக இப்பகுதி இருப்பதால், எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் காந்திரோடு முழுதும் கடும் நெரிசல் ஏற்படும். காந்திரோட்டில் நெரிசலை குறைக்க, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து தோல்வியடைந்தன.ஒரு வழியாக, காந்திரோட்டின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, நடுவே ஒருவழிப் பாதையாக மாற்றி அமைத்துள்ள புதிய நடவடிக்கை, வாகன ஓட்டிகளுக்கு கைகொடுத்துள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக, மூங்கில் மண்டபம் முதல் ரங்கசாமி குளம் வரை வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடிகிறது.அதாவது, காந்திரோட்டை, 30 வினாடிகளில் கடக்க முடிவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இருபுறமும் கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பாதையில், கார், வேன், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த போக்குவரத்து மாற்றம் நல்ல பலன் அளித்துள்ள நிலையில், பழையபடி ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என, காந்திரோடு வியாபாரிகள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.வியாபாரிகள் ஏற்கனவே எஸ்.பி., அலுவலகத்தில் தங்களது எதிர்ப்பை மனுவாக அளித்தனர். அதைத் தொடர்ந்து, மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், புதிய போக்குவரத்து மாற்றத்தை எந்த வகையிலும் போலீசார் மாற்றவில்லை.இந்நிலையில், அடுத்தகட்ட போராட்டமாக, நாளை கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். புதிய போக்குவரத்து மாற்றம் பாதசாரிகள், ஆம்புலன்ஸ் போன்றவை செல்ல முடியவில்லை எனவும், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டத்தை அறிவித்துள்ளனர்.போக்குவரத்து மாற்றம் நல்ல பலன் அளித்துள்ள நிலையில், பழையபடி போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்த வியாபாரிகள் கேட்பது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காந்திரோடு போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளுக்கு எளிதாக உள்ளது. வியாபாரிகள், பாதசாரிகள் எளிதாக சென்று வர ஏதுவாக, பிளாஸ்டிக் தடுப்புகள் போன்றவை அமைத்து, நன்றாக முறைபடுத்த உள்ளோம். வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் போக்குவரத்து மாற்றம் அமையும்.- சண்முகம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,காஞ்சிபுரம்.
17-Dec-2024