போக்குவரத்து மாற்றத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு புதிய நடைமுறைக்கு வாகன ஓட்டிகள் ஆதரவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின் மிக முக்கிய சாலையாக காந்திரோடு உள்ளது. இங்கு, ஏராளமான பட்டு சேலை கடைகள் மட்டுமல்லாமல், ஜவுளிக்கடைகள், ஹோட்டல், திருமண மண்டபம், வங்கிகள் போன்றவை இயங்கி வருகின்றன.நகரின் வியாபார மையமாக இப்பகுதி இருப்பதால், எப்போதும் வாகன நெரிசலாக காணப்படும். முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில், பட்டு சேலை வாங்க வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கார்களில் வருவதால், காந்திரோடு முழுதும் கடும் நெரிசலாக காணப்படும்.மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து பலகட்ட நடவடிக்கை எடுத்தபோதும், கடந்த ஆண்டுகளில் அவை தோல்வியடைந்தன. இந்நிலையில், காந்திரோட்டின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, நடுவே ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை கடந்த சில நாட்களுக்கு முன் அமலுக்கு வந்தது. இந்த போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மூங்கில் மண்டபம் பகுதியில் இருந்து தேரடி வரை நெரிசல் ஏதுமின்றி பயணிக்க எளிதாக உள்ளது. ஆனால், இந்த புதிய நடைமுறை, வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, காந்திரோடு வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.சாலையில் இருபுறம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என, ஏற்கனவே போலீஸ் எஸ்.பி.,யிடம் மனு அளித்திருந்தனர்.இந்நிலையில், நாளை காந்திரோட்டில் மனித சங்கிலி போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட உள்ளனர். வியாபாரம் பாதிப்பதாகவும், தடுப்புகள் அகற்றி ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக, பேருந்து, வேன், கார், இருசக்கர வாகனம் என, அனைத்து தரப்பு வாகனங்களும் எளிதாக செல்லக்கூடிய நிலையில், வியாபாரிகள் போராட்டத்தை நடத்துவது, போலீசாருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.காந்திரோட்டின் இருபுறமும் உள்ள ஏராளமான கடைகளுக்கு தேவையான இடைவெளி விட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வியாபாரம் பாதிப்பதாக கூறுவது, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என, வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட போக்குவரத்து விதிமுறைகளை தொடர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.