லாரியில் இருந்து சாலையில் சரிந்த 35 டன் இரும்பு தகடால் வல்லத்தில் நெரிசல்
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, வல்லம் சந்திப்பில் மாடுகள் குறுக்கே வந்ததால், 35 டன் இரும்பு தகடுகள் லாரியில் இருந்து, சாலையில் சரிந்து விழுந்தது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் உள்ள தனியார் 'ஸ்டீல்' தொழிற்சாலையில் இருந்து, 35 டன் இரும்பு தகடுகளை ஏற்றிய லாரி ஒன்று, நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி புறப்பட்டது. நள்ளிரவு 3:00 மணி அளவில், ஒரகடம் அடுத்த, வல்லம் சந்திப்பு அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் வந்தன. இதனால், லாரியின் ஓட்டுநர் வாகனத்தை பிரேக் பிடித்து இடதுபுறமாக திருப்பினார். அப்போது, லாரியில் இருந்த 35 டன் இரும்பு தகடுகள், லாரியில் இருந்து சரிந்து சாலையில் விழுந்தது. வல்லம் வடகால் சிப்காட் சாலை சந்திப்பு நடுவே சரிந்து விழுந்த இரும்பு தகடுகளால், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்த தகவலின்படி அங்கு வந்த ஒரகடம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையில் இருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், நேற்று காலை முதல், மாலை வரை 5:00 மணி வரை, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.