| ADDED : நவ 19, 2025 04:41 AM
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் உள்ள பொன்னேரி ஏரி அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரி நீரை பயன்படுத்தி அப் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். பின், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதால் ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறைந்துவிட்டது. இந்நிலையில் பராமரிப்பு இல்லாததால், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயில் செடிகள் வளர்ந்து கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், ஏரி முழுமையாக நிரம்பினால், உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழும் நிலை உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொன்னேரி ஏரியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.