கீழ்வீதி கோவில் குளத்திற்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: கீழ்வீதி கிராம கோவில் குளத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பகுதியில் இருந்து, பானாவரம் வழியாக சோளிங்கருக்கு செல்லும் பிரதான சாலை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலை வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, திருமால்பூர், கோவிந்தவாடி, நெமிலி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் சோளிங்கர் மார்க்கமாகவும்; சோளிங்கர், பானாவரம், மகேந்திரவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் நெமிலி மார்க்கமாகவும் வாகனங்களில் செல்கின்றனர். இதில், கீழ்வீதி கூட்டு சாலை அருகே, கிராம கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம், நெமிலி- - பானாவரம் சாலையோரம் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, கீழ்வீதி கிராமம் அருகே, சாலையோர குளத்திற்கு தடுப்பு ஏற் படுத்தி வாகன விபத்தை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.