உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர்,உத்திரமேரூர் சின்னநாரசம்பேட்டை தெருவில், 1,200 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது.ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், மாசி மகம், பிரதோஷம், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும்.அப்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும் ஏராளனமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கோவிலில் முறையான பராமரிப்பு இல்லாததால், கோவிலின் மூலவர் கட்டடம் சேதமடைந்து வருகிறது. மேலும், கோவில் கோபுரத்தில் அரச மரச்செடிகள் முளைத்து வருகின்றன.இதனால், மரத்தின் வேர்கள் கட்டடத்தின் உள்ளே சென்று, அதன் உறுதித்தன்மை பாதிக்கப்படும் சூழல் உள்ளது.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதிலிருந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இதனால், பக்தர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். சேதமடைந்த கோவிலை சீரமைக்க, துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, சேதமடைந்த கைலாசநாதர் கோவில் கட்டடத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.