உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கனரக வாகனங்கள் செல்லும் வகையில் தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கனரக வாகனங்கள் செல்லும் வகையில் தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:மேம்பாலத்தில் வாகன நெரிசல் அதிகரித் துள்ளதால், கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயக்கப்படும் கனரக வாகனங்கள் செல்லும் வகையில், திருமுக்கூடல் - பழையசீவரம் பாலாற்று தரைப்பாலத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் அடுத்த பழையசீவரத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் பாலாற்றின் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில், இந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம். இதனால், இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க சுற்றுவட்டார பகுதியினர் வலியுறுத்தினர். அதன்படி, 15 ஆண்டுகளுக்கு முன், பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே, ஏற்கனவே இருந்த தரைப்பாலம், கடந்த ஆண்டுகளில் பாலாற்று வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து பயன்பாடின்றி கைவிடப் பட்டுள்ளது. தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், உயர்மட்ட பாலம் வழியாக சுற்றிலும் உள்ள கிரஷர் மற்றும் கல் குவாரிகளில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இரவு, பகலாக தொடர்ந்து சென்று, வருகின்றன. இதனால், உயர்மட்ட பாலம் பலவீனம் அடைந்து வருவதோடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் புழுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மற்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர் . எனவே, கைவிடப்பட்ட திருமுக்கூடல் பாலாற்று தரைப்பாலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் சீரமைத்து, அதில் கல் குவாரி மற்றும் கிரஷர்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை