காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் தொட்டிகள் சீரமைக்க வலியுறுத்தல்
அய்யங்கார்குளம்:அய்யங்கார்குளம் ஊராட்சியில் பழுதடைந்து காட்சி பொருளாக மாறியுள்ள, மூன்று சிறுமின்விசை குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி கீழாண்ட தெரு, நடுத் தெரு, கங்கையம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூடுதல் குடிநீர் தேவைக்காக மூன்று இடங்களில் அமைக்கப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டியில் அப்பகுதி மக்கள் வீட்டு உபயோக தேவைக்கு தண்ணீர் பிடித்து வந்தனர்.இதில், நடுத்தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி நீரை தெருவாசிகள் மட்டுமின்றி பள்ளி மாணவ- - மாணவியரும் பயன்படுத்தி வந்தனர். கங்கையம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில், அம்மனுக்கு பொங்கல் வைக்கும் பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், மூன்று குடிநீர் தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் அமைக்கப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்து விட்டது. பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், பகுதி மக்கள் கூடுதல் குடிநீர் தேவைக்காகவும், பள்ளி மாணவ - மாணவிரும் மதிய உணவு சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம் செய்ய வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கங்கையம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்க தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது.எனவே, அய்யங்கார்குளம் ஊராட்சியில், கீழாண்டை தெரு, நடுத்தெரு, கங்கையம்மன் கோவில் என, பழுதடைந்து காட்சி பொருளாக மாறியுள்ள மூன்று சிறுமின்விசை குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.