தனி அடையாள எண் பெறாத 12,603 விவசாயிகளுக்கு...எச்சரிக்கை:ஊக்கத்தொகை ஏப்ரலில் நிறுத்த கலெக்டர் உத்தரவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிலம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாத, தனி அடையாள எண் பெறாத, 12,603 விவசாயிகளின் ஊக்கத்தொகை ஏப்ரல் மாதம் நிறுத்தப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், படப்பை, உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 1.33 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், 85,000 ஏக்கர் நிலங்களில், நெல், காய்கறி உள்ளிட்ட பல வித பயிர்களை, 65,800 விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கவுரவ உதவித்தொகை, மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி மத்திய, மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.மத்திய அரசு வழங்கும், பிரதமர் கவுரவ உதவித்தொகை விவசாயி அல்லாதவர்களுக்கு சென்றுவிடக்கூடாது என, இணைய வழியில் பதிவு செய்து, மத்திய அரசு கவுரவ நிதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது.விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடைய கூடாது என்பதற்காக, ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண் துறையினர் தீவிரபடுத்தியுள்ளனர்காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகிய துறையினர் வாயிலாக, அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது, அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பி.எம்., கிசான் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், 22,655 விவசாயிகளில், 10,062 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.மீதமுள்ள 12,603 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, கூட்டு பட்டா, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், அரசு கள அலுவலர்களையோ, அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொள்ள வேண்டும்.அவர்கள், உடனடியாக பதிவு பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பி.எம்.கிசான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு, 20வது தவணை நிறுத்தப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.எனவே, விவசாயிகள் தொடர்ந்து பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.