உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செய்யாறு, பாலாறு சீரமைப்பு பணிகளுக்கு நிதியின்றி நீர்வளத் துறை புலம்பல்

செய்யாறு, பாலாறு சீரமைப்பு பணிகளுக்கு நிதியின்றி நீர்வளத் துறை புலம்பல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் கிராமம் அருகே, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தரும் காவாந்தண்டலம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், பக்கவாட்டு கால்வாய் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.ஏரிக்கு தங்கு தடையின்றி தண்ணீரை கொண்டு செல்ல, 8 கோடி ரூபாய் மதிப்பில், வெங்கச்சேரி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே, 2017ல், புதிதாக அணை கட்டப்பட்டது.இந்த அணைக்கட்டின் ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர்வரத்து கால்வாய் வாயிலாக, காவாந்தண்டலம் ஏரிக்கு சீராக செல்லும் வகையில் கட்டப்பட்டது.கடந்த 2021ல் பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமானது.கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே அணைக்கட்டின் அடிப்பகுதி சேதம் ஆனதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி கொட்டும் இடத்தில், கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கின்றன.இதுமட்டுமல்லாமல், காவாந்தண்டலம் ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. ஏரிக்கு செல்லும் கால்வாயில் பெரிய அளவிலான துவாரங்கள் உள்ளன.கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏரிக்கு செல்லும் தண்ணீர், மீண்டும் ஆற்றிலேயே வடிகிறது.காவாந்தண்டலம் ஏரிக்கு புதிதாக கால்வாய் கட்டவும், சேதமான அணைக்கட்டை சீரமைக்கவும், தமிழக அரசிடம் மொத்தம் 17 கோடி ரூபாய் கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறையினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கருத்துரு அனுப்பி உள்ளனர்.ஆனால், இதுவரை 17 கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கீடு வழங்காததால், கால்வாய் கட்டாமலும், அணைக்கட்டு சீரமைக்க முடியாமலும் உள்ளது.இதேபோல, பழையசீவரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில், வெள்ளம் ஏற்படும்போதெல்லாம், அணையின் அடிப்பகுதியில் மணல் சேர்ந்து குவியலாக உள்ளது.தடுப்பணையின் உயரம் வரை சேகரமாகி உள்ள மணல் திட்டுகளை அகற்ற வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மணல் திட்டுகளை அகற்ற, 3.3 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறை கருத்துரு அனுப்பியிருந்தது. ஆனால், இதுவரை நிதி ஏதும் ஒதுக்காததால், மணல் அகற்ற முடியாத நிலை நீடிக்கிறது.வெங்கச்சேரியில், செய்யாற்றின் குறுக்கே சேதமாகியுள்ள அணைக்கட்டை சீரமைக்கவும், பாலாற்றில் தடுப்பணையில் சேகரமாகியுள்ள மணல் திட்டுகளை அகற்றவும் நிதியின்றி நீர்வளத்துறையினர் புலம்பி வருகின்றனர்.இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி கேட்டு நாங்கள் கருத்துரு அனுப்பி விட்டோம். அரசு தான் நிதியை ஒதுக்க வேண்டும். விரைவில் செய்யாறு, பாலாறு ஆறுகளில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியை எங்கள் துறை ஒதுக்கிவிடும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி