உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விசூரில் நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

விசூரில் நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

உத்திரமேரூர்:விசூரில் கட்டப்பட்டுள்ள நெல் தரம் பிரிக்கும் கூடத்தை, விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது விசூர் கிராமம். இந்த கிராமத்தில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள, விளை நிலங்களில் ஒவ்வொரு பருவத்திலும் அறுவடை செய்யப்படும் நெல்லை, உலர்த்த போதிய நெற்கள வசதி இல்லாமல் இருந்தது. இதனால், விவசாயிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் நெல்லை சாலையோரங்களிலும், வீட்டு வாசலிலும் கொட்டி உலர்த்தி வந்தனர். அப்போது மழை வந்தால் நெல்லை பாதுகாப்பதில் விவசாயிகளுக்கு சிரமமாக இருந்தது. எனவே, விசூரில் உலர்களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், 2024 -- 2025 நிதி ஆண்டில், 33.74 லட்சம் ரூபாய் செலவில், உலர்களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் தரம் பிரிக்கும் கூடம் கட்டி முடிக்கப்பட்டு, நான்கு மாதங்களாகியும் மின் இணைப்பு இல்லாததால் இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, விசூரில் கட்டப்பட்டுள்ள நெல் தரம் பிரிக்கும் கூடத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது : விசூரில் கட்டப்பட்டுள்ள நெல் தரம் பிரிக்கும் கூடத்தில் மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. மின் இணைப்பு பெறுவதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை