மின்மாற்றி அமைத்தும் இணைப்பில்லை மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு எப்போது?
உத்திரமேரூர்:மணல்மேடில் புது மின் மாற்றி அமைத்தும் இணைப்பு வழங்காததால், குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என தெரியாமல் விவசாயிகள் உள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் ஊராட்சியில் கன்னிகுளம், மணல்மேடு, புலிவாய், விஜயநகர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு மூலமாக நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர். இப்பகுதியில், குறைவான மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு வந்தது.எனவே, கூடுதலாக மின் மாற்றி அமைக்க மின்வாரியத்திற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, மின் வாரியத் துறையினர் மூலமாக மணல்மேடு பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், மின்மாற்றியில், ஒரு மாதமாக மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, புதிய மின்மாற்றிக்கு உடனே மின் இணைப்பு வழங்க, மின் வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மணல்மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியில் விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின், மின் மாற்றி பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.