இடநெருக்கடியில் பயிலும் குழந்தைகள் புதிய அங்கன்வாடி மையம் அமையுமா?
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, திருமங்கையாழ்வார் சாலையில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூட்டுறவு பால் விநியோக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பராமரிப்பில்லாமல் பழுதடைந்துள்ள கட்டடத்தில் போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லை.இதனால், குழந்தைகள் இடநெருக்கடியில் அவதியடைந்து வருவதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து அங்கன்வாடி மைய ஊழியர் கூறியதாவது:அங்கன்வாடி மையத்திற்கென தனி கட்டடம் இல்லாததால், இரண்டு அங்கன்வாடி மையம் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.