10 நாளாக சிலிண்டர் கிடைக்கலை குடும்ப பெண்கள் கடும் அவஸ்தை காஞ்சியில் காஸ் ஏஜென்சிகள் அலட்சியம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், 10க்கும் மேற்பட்ட சிலிண்டர் சப்ளை செய்யும் காஸ் ஏஜென்சிகள் செயல்படுகின்றன. இந்த ஏஜென்சிகள் வாயிலாக வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், எடை இயந்திரம் கொண்டு வருவதில்லை என, பல்வேறு புகார்களை நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்திலும், நுகர்வோர் அமைப்புகள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றன. இருப்பினும், காஸ் ஏஜென்சிகள் முறையான சேவையை, நுகர்வோருக்கு வழங்குவதில்லை.சமீப நாட்களாக, சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்களாகியும், சிலிண்டர் வருவதில்லை என, குடும்ப பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.முன்பதிவு செய்து, 10 நாட்கள் மேலாகியும் வீட்டிற்கு சிலிண்டர் வரவில்லை என, ஏஜென்சிக்கு போனில் அழைத்தாலும், முறையான பதில் அளிப்பதில்லை. இதுதொடர்பான புகார், சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.சிலிண்டர் காலியான நிலையில், மாற்று சிலிண்டர் கிடைக்காமல் பலரும் சிரமப்பட்டுகின்றனர். பலரது வீடுகளில் சமையல் செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளுக்கு விரைவாக சிலிண்டரை சப்ளை செய்யாமல், காஸ் ஏஜென்சிகள் அலட்சியமாக இயங்குவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் நகரில், சமீப நாட்களாக இந்த புகார் அதிகரிப்பதால், மாவட்ட வருவாய் அலுவலர் இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.