கன்னியாகுமரி வந்த ரயிலின் உதவி லோகோ பைலட் மரணம்
நாகர்கோவில்:கவுகாத்தியிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயிலின் உதவி லோகோ பைலட் மாரடைப்பால் மரணமடைந்தார்.அசாம் மாநிலம், கவுகாத்தியிலிருந்து கன்னியாகுமரிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:12 மணிக்கு கன்னியாகுமரியில் பயணியரை இறக்கிய பின், நேற்று அதிகாலை, 1:10 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தது. இதில், லோகோ பைலட் மோகனனுடன், உதவி லோகோ பைலட்டாக பிரதீப் பணியில் இருந்தார்.மோகனன் ரயிலில் இருந்து இறங்கிய நிலையில், பிரதீப் உட்கார்ந்த நிலையில் அப்படியே இருந்தார். ரயில்வே டாக்டர்கள் அவரை பரிசோதித்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பிரதீப் கேரள மாநிலம், கொல்லம் புளியம் தெற்கு சந்தனத்தோப்பை சேர்ந்தவர். மாரடைப்பால் அவர் இறந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.