ஓமன் கடலில் தத்தளித்த மீனவர்கள்; 12 பேர் இன்று கொச்சி வருகை
நாகர்கோவில் : விசைப்படகு இயந்திர கோளாறு காரணமாக ஓமன் கடல் பகுதியில் தத்தளித்த 12 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டு இன்று கொச்சி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஐவர், கடலூரை சேர்ந்த ஒருவர், புதுச்சேரியைச் சேர்ந்த இருவர் என 12 பேர் கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து செப்., 11-ல் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர்.மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்த போது இயந்திர கோளாறு ஏற்பட்டது. அவர்களின் உறவினர்கள் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு அளித்தனர். படகின் இயந்திர பழுதை சரி செய்யவும், மீனவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கிடவும் அப்பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களுக்கு இந்திய கடலோர காவல் படையால் தகவல் தெரிவிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டது. இயந்திர கோளாறு சரி செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து கடலோர காவல் படை ஏற்பாட்டில் கைலா பார்ச்சூன் என்ற சரக்கு கப்பல் மூலம் 12 மீனவர்களும் அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் இன்று கொச்சித் துறைமுகம் வந்து பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வர உள்ளனர்.