40 பவுன் போலி நகை அடகு வைத்து மோசடி
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சந்திப்பில் ரப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு நகை கடன் வழங்கப்படும். இதில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நகை பரிசோதகராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தணிக்கையில் ஏராளமான போலி நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணையில் நகை பரிசோதகரின் உதவியுடன் வைக்கப்பட்டது உறுதியானது. நகை பரிசோதகரின் தாய், தந்தை, உறவினர்கள் பெயரில் அவை வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து அருமனை போலீசில் சங்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது. மோசடி தொடர்பாக எஸ்.ஐ. சுசின் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். இதில் 17 கணக்குகளில் நகை அடகு வைக்கப்பட்டு இருப்பதும் அதில் 12 கணக்கில் இருக்கும் நகை முற்றிலும் போலி என்பதும் தெரியவந்தது. மொத்தம் 40 பவுன் போலி நகை இரண்டு ஆண்டுகளாக அடகு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேல்விசாரணை நடக்கிறது.