உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / திற்பரப்பு அருவி சீரமைப்பு பணிகள் சுற்றுலா பயணிகள் அதிருப்தி

திற்பரப்பு அருவி சீரமைப்பு பணிகள் சுற்றுலா பயணிகள் அதிருப்தி

திற்பரப்பு : திற்பரப்பு அருவியில் சீரமைப்பு பணிகளில் தேவையற்ற கற்களை அருவியின் அருகே ஆற்றில் கொட்டுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திற்பரப்பு அருவியில் கடந்த டிசம்பர் வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட சேதத்தால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். சீரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளாததால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த பணிகள் பின் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அருவி விழா ஆய்விற்காக திற்பரப்பு அருவி வந்த மாவட்ட கலெக்டர் மதுமதியிடம் பணிகள் மேற்கொள்ளாமல் நிர்வாகம் காலம் கடத்தி வருவது குறித்தும், இதனால் அருவிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்தும் பொதுமக்கள் எடுத்து கூறினர்.

மாவட்ட கலெக்டர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் அளவிற்கு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் ஆய்வின் போது ஏற்கனவே செய்யப்பட்ட சில வளர்ச்சி பணிகள் ஆற்றை நிரப்பி இயற்கை அழகை பாதிக்கும் அளவிற்கு மேற்கொண்டிருப்பதை பார்த்து அதிருப்தி தெரிவித்தார். இனிமேல் செய்யும் வளர்ச்சி பணிகளை இயற்கையின் கொடைகளை சேதப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆற்றிற்கு பாதிப்பு இல்லாமல் அருவியின் சுற்றுப்புறங்களில் பணிகள் செய்யவும் அறிவுறுத்தினார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பேரூராட்சிகளின் உதவி இன்ஜினியர் ராமசாமி பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.

கலெக்டர் ஆய்விற்கு பின் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. அருவியில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கில் சேதமான பகுதிகளில் காணப்பட்ட கான்கிரீட் மற்றும் கற்கள் புதிதாக பணிகள் மேற்கொள்ள வசதியாக அப்புறப்படுத்தப்பட்டது. இவ்வாறு எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் கான்கிரீட் துண்டுகளை அருவியின் குளிக்கும் பகுதியின் ஓரத்தில் ஆற்றில் போடப்பட்டுள்ளது. அழகிய பாறைகளுடன் காட்சியளித்த பகுதியில் இவ்வாறு கற்களை போட்டுள்ளது பார்போர் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது. குளிக்கும் பகுதியோடு சேர்ந்து இப்படி நிரப்பி உள்ளதால் சுற்றுலா பயணிகள் இது வழியாக ஆபத்தான பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

தற்போது அருவியில் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. சற்று அதிகமாக தண்ணீர் வரும் போது தண்ணீர் இதுவழியாக நீச்சல் குளத்திற்கு பாய்ந்து செல்லும். அருவியில் தண்ணீர் வழியாக வரும் கழிவுகளும் இப்பகுதியில் தேங்கி சுகாதாரக்கேடு விளைவிக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இவ்வாறு கழிவுகளை அப்புறப்படுத்த மிக எளிதான முறையில் அருகிலே ஆற்றில் கொட்டுவது இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு நல்லதல்ல. நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் திற்பரப்பு போன்ற பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகள் திட்டமிட்டு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுபோன்று புதிதாக ஆற்றில் மண்போட்டு உருவாக்கிய சிறுவர் பூங்கா இதுவரை திறப்பு விழா காணாமல் உள்ளது. இதில் உள்ள ஊஞ்சல் போன்ற பொருட்கள் காணவில்லை. தற்போது சிறுவர்கள் இப்பகுதியில் விளையாட சென்றாலும் ஏமாற்றமடையும் நிலையில் உள்ளது. உடனடியாக பாதிப்புகளை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் திற்பரப்பு மகாதேவர் கோயிலின் முன் பகுதியில் உள்ள கல் மண்டபத்திற்கு செல்லும் கல் பாலத்தையும் சீர் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை