தமிழக எல்லையில் நாய்களை இறக்கி விட முயற்சி அபராதத்துடன் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
நாகர்கோவில்,:கேரள - குமரி எல்லையில் தெரு நாய்களை கொண்டுவந்து இறக்கிவிட்டு தப்ப முயன்ற கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.குப்பைகள், கோழிக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றை கொட்டுவதற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக எல்லையை பயன்படுத்தி வந்தனர். திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட குப்பையை வாகனத்தில் ஏற்றி கேரளாவுக்கு திருப்பி அனுப்பிய சம்பவத்தை தொடர்ந்து குப்பைகள் வருவது தற்போது குறைந்துள்ளது.இந்த நிலையில் கன்னியாகுமரி--திருவனந்தபுரம் எல்லையில் களியக்காவிளை அருகே அமைந்துள்ள கட்டச்சல் என்ற இடத்தில் நேற்று மதியம் ஒரு வாகனத்தில் நாய்களை கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து வைத்தனர்.பின்னர் களியல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தினார். பின்னர் கடையால் பேரூராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அந்த வாகனத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திறந்து விடப்பட்ட நாய்களை அவர்களை வைத்தே பிடித்து வாகனத்தில் ஏற்றி திருப்பி அனுப்பி வைத்தனர்.