3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது
நாகர்கோவில்:சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே நெய்யூர் புதுவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் 55. கட்டுமான ஒப்பந்தக்காரர். இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வாங்குவதற்கு விண்ணப்பித்து தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டார். கிராம நிர்வாக அலுவலர் அமலா ராணி 44, சான்றிதழ் வழங்குவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பின்னர் அது மூவாயிரம் ரூபாய் என முடிவு செய்யப்பட்டது. ஆறுமுகம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று காலை ஆறுமுகம் ரசாயன பவுடர் பூசிய மூவாயிரம் ரூபாயை உதவியாளர் பேபியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும், அவர்களது லேப்டாப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.