தொழிலாளிக்கு கத்திக்குத்து; தி.மு.க., பிரமுகர் மகன் கைது
தக்கலை : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பை சேர்ந்தவர் ஜான் கென்னடி, 43, ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. மூன்று மாதங்களுக்கு முன், இவர் டூ-வீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏழாம் பொற்றை பகுதியில் எதிரே வந்த மூன்று பேர் இவரை தடுத்து நிறுத்தி, தகராறில் ஈடுபட்டனர். கத்தியால் ஜான்கென்னடியின் வயிற்றில் குத்தி விட்டு தப்பினர்.அவ்வழியாக சென்றவர்கள் ஜான் கென்னடியை மீட்டு, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஜான் கென்னடியை குத்தி விட்டு டூ - வீலரில் தப்பிச் சென்றவர், பத்மநாபபுரம் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தியோடர் ரெஜினால்டு மகன் ஆனந்த் பிலி சிங் என்பது தெரிந்தது.இதையடுத்து, கத்திக்குத்து நடந்த, 100 நாட்களுக்குப் பின் அவரை கொற்றியோடு போலீசார் நேற்று கைது செய்தனர்.