ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கரூர், அக். 20-கரூரில், அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.காவிரியாற்றின் துணை நதியான அமராவதி ஆறு, பழனிமலை தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகி கரூர், திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்துகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில், ஆங்காங்கே முளைத்து ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட வேண்டும்.அமராவதி ஆற்றில் அணை கட்டப்படும் முன், எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் அணையை கட்டிய பின், ஆற்றின் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியான கரூருக்கு உரிய தண்ணீரை கொடுப்பதில்லை. மழை கருணை காட்டினால் மட்டுமே, கடைமடையான கரூர் மாவட்டத்துக்கு ஆற்றில் தண்ணீர் வருகிறது. மேலும், தண்ணீருக்கு தடை ஏற்படுத்தும் வகையில், கரூரில் படித்துறை, மதுரை -பைபாஸ் சாலை மேம்பாலம் போன்ற பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் முளைத்துள்ளன.கடந்த ஆண்டு மரங்கள் அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் சீமை கருவேல மரங்கள் புதர்போல முளைத்து ஆற்றை ஆக்கிரமித்துள்ளன. நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் ஆற்றில் கலக்கின்றன. ஆற்றோரம் செயல்படும் சலவை ஆலைகளில் இருந்து, வெளியேறும் சுத்திகரிக்கப்படாத வேதிப்பொருள்கள் கலந்த சலவை தண்ணீரும் ஆற்றில் விடப்பட்டு, ஆறு மாசடைந்து வருகிறது. எனவே, சீமை கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.