காலையில் கொளுத்திய வெயில் இரவில் கொட்டிய திடீர் மழை
கரூர், கரூர் மாவட்டத்தில் நேற்று வெயில், 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. அதே சமயம் இரவு, கரூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது.தென் மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்தம் ஏற்பட்டது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.கரூர் மாவட்டத்தில், நேற்று காலை முதல் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. இறுதியாக மாலை, 5:45 மணிக்கு வெயிலின் தாக்கம், 101.3 டிகிரியாக இருந்தது. இந்நிலையில் இரவு, 7:00 மணி முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது. அதைதொடர்ந்து, கரூர் டவுன், காந்திகிராமம், தொழிற்பேட்டை, செல்லாண்டிப்பாளையம், திருகாம்புலியூர், வாங்கல், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றிமலை, சுக்காலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்னல் மற்றும் குளிர்ந்த காற்றுடன், சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று கோடை வெயில், 100 டிகிரி தாண்டி, வெப்ப தாக்கத்தில் அவதிப்பட்ட கரூர் வட்டார பகுதி மக்களுக்கு, திடீர் மழை சற்று குளிர்ச்சியை தந்தது.